வாழ்க்கையை தொலைத்ததால் வந்ததா நீரிழிவு?- ஆங்கில மருத்துவமும், சித்தாவும் இணையும் சிகிச்சை: ஒரு பார்வை

நீரிழிவு நோய் தவிர்க்கவே முடியாதா? வந்த பின்னர் என்ன செய்வது? அதிகரிக்கும் மருந்து விலை, தொடர்ச்சியாக சாப்பிடுவதா? சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்கிறதா? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் ‘தி இந்து’ தமிழ் இணையதளம் சார்பில் வைத்தபோது அவர் கூறியதாவது:

இந்த ஆண்டு நீரிழிவு தினத்தை பெண்களும் நீரிழிவு நோயும் என்பது போல் அனுஷ்டிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்றால் ஒட்டு மொத்த உலகத்துக்கும் நீரிழிவின் தலைமை இடமாக இந்தியா மாறி வருகிறது. ஆண் பெண் வேறுபாடின்றி அதன் பாதிப்பு இளம் வயதிலேயே கூடுகிறது. ஒரு காலத்தில் வயோதிகத்தின் நோயாகவும், அதிக சர்க்கரை சாப்பிடுபவர்கள் அதிக உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டும் இருந்த நிலை மாறி ஒட்டு மொத்த ஆசிய மரபுக்கே இது அடிப்படை நோயாக மாறும் புள்ளி விபரங்கள் தெரிய வருகிறது.

இந்த சூழலில் இதை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால் குழந்தைப் பருவத்திலிருந்தே இத்தகைய சூழல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வந்த பின்னர் இனிப்பை நிறுத்திக்கொள்கிறேன் என்று இருப்பதால் ஒன்றும் மாறி விடாது. இன்று குழந்தைகள் தினமும் கூட, அப்படியானால் நாம் எப்படிப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் இந்த நாட்டுக்கு பெரிய பங்களிப்பை செய்ய முடியும். நீரிழிவு நோய் வராத ஒரு உலகத்தை படைக்க வேண்டும் என்றால் அதற்கான மன திடம் குழந்தைகள் பருவத்தில் வரவேண்டும்.

நேரமில்லாததால் ரெடிமேட் உணவா?

உணவுதான் முதல் அடிப்படையான விஷயம். அவசரமாக தயாரிக்கும் துரித உணவுப் பிடிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்குகிறோம். நேரமில்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு, காலையில் துரித உணவு, இரவு வெளியே போய் சாப்பிடுவது என்ற கலாச்சாரம் நகர்ப்புறத்தில் அதிகரித்து வருகிறது. அது போன்று அதிக எனர்ஜி, அதிக கலோரி, அதிக சர்க்கரை உள்ள உணவை உண்கிறோம். குழந்தைகளாக இருந்தாலும் இதை தவிர்க்க வேண்டும்.

உடல் உழைப்பு என்பது முக்கியமான விஷயம். நமது வாழ்வியலோடு நடைப்பயிற்சி இருந்தது என்பது மாறிப்போனது. இன்று மாறிவரும் உலகில் அது நடைப்பயிற்சி, ஓட்டம் என்பது உடற்பயிற்சியாக மாறி உள்ளது. நவீன அறிவியல் தினம் 10 ஆயிரம் அடிகள் அல்லது 4.5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி இருக்க வேண்டும் என்கிறது நவீன அறிவியல்.

இனிப்பெடு கொண்டாடு. பின்னாடி திண்டாடு!?

வெள்ளைச் சர்க்கரையை வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டும். அதற்கு பதில் வெல்லம், கருப்பட்டி, தேன் அப்படியே இல்லாவிட்டால் பழுப்புச் சர்க்கரையை உபயோகப்படுத்த வேண்டும். சாக்லெட் இனிப்பு பண்டங்கள் பிடிக்குள் குழந்தைகள் சிக்குகிறார்கள். இனிப்பெடு கொண்டாடு பின்னாடி திண்டாடு என்பதுதான் பிரச்சினை. கொண்டாட்டத்துக்கு இனிப்பு வேண்டும். அது பழங்களிலிருந்து அல்லது பனைவெல்லம் போன்றவற்றின் மூலம் பயன்படுத்தலாம்.

வாழ்வைப் பற்றிய புரிதல் சர்க்கரை நோயைத் தடுக்கிறது

இளம் வயதில் சர்க்கரை வியாதி அதிகரிக்க காரணம் பரபரப்பான வாழ்வியலும் ஒரு காரணம். மன அழுத்தம் மட்டுமல்ல பரபரப்பே பிரச்சினைதான். எதற்கெடுத்தாலும், பதற்றம், பரபரப்பு, டென்ஷன் போன்றவற்றிலே இருக்கிறோம். அது இல்லாமல் மகிழ்வான, அகமகிழ்வான வாழ்வியலை நோக்கி நாம் நகர வேண்டும். அகமகிழ்வான வாழ்க்கையை நாம் எப்படிப் பெறுவது அந்தப் புரிதலை நாம் சிறு வயதிலிருந்தே கொண்டு வர வேண்டும்.

இளம் பருவத்தை எதிர்கொள்ளும் விதம்

எதுக்கு சந்தோஷப்பட வேண்டும், எதற்கு வருத்தப்பட வேண்டும் என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் அதீதமாக பார்க்கும் ஒரு கூட்டமாக நாம் மாறி வருகிறோம். இளம் வயதில் 30 வயதில் இருப்பவர்கள் வாழ்வின் இனிப்பான தருணங்களை விட்டுவிட்டு எதுக்கோ, என்னவோ என்று ஓடிக்கிட்டே இருக்கக் கூடிய பரபரப்பான வாழ்க்கையில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் பரபரப்பாக இருக்கும் போது சர்க்கரையின் அளவு கூடி குறைந்துகொண்டு இருக்கும். ஆரம்ப கட்ட சர்க்கரை நோயாளிகளில் கூட யார் இயல்பான நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் உடனே வரும். வேலை நிமித்தமாக அல்லது இயல்பாகவே பரபரப்பாக இருப்பவர்களுக்கு கட்டுப்பாட்டில் வராது. தூக்கம் மிக முக்கியம்.

எப்படிப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

வேகமாக வேகமாக ரத்தத்தில் சர்க்கரையை கலக்கும் உணவு வகைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதாவது கிழங்கு வகைகள் கார்போ ஹைட்ரேட் உணவு வகைகள் எடுக்கலாம். வேகமாக செரிக்காத உணவுகள் நல்லது. பயம் கூடாது. அதே நேரம் அலட்சியமும் கூடாது. இரண்டுக்கும் நடுவில் பதற்றப்படாமல் இயல்பான மன நிலையில் இருக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.

வெறும் மருந்து மட்டும் சர்க்கரையை கட்டுப்படுத்தாது. உணவுக் கட்டுப்பாடு, பயிற்சி, தூக்கம், வாழ்வியல் நன்றாக இருக்க வேண்டும்.

எந்த மூலிகை சிறந்தது?

மூலிகைகளில் நிறைய ஆய்வுகளில் புதிய புதிய விஷயங்கள் கண்டுபிடித்து வருகிறார்கள், சித்த மருத்துவத்தில் சிறந்த மூலிகை என்றால் ஆவாரை கஷாயம் ஒன்றைச் சொல்கிறோம். ஆவரை குடி நீர். ஆவரை, கொன்றை, நாவல் சேர்ந்து செய்யக்கூடிய ஒரு வகை கஷாயம். அந்த காலத்தில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கஷாயம். சர்க்கரை வியாதி இருக்கிறவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் ரெகுலராக எடுத்துக்கொண்டு வரலாம். சாதாரணமாக காஃபி போன்று அருந்தலாம். அது சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல சர்க்கரையினால் வரும் மற்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்.

ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஆவாரை கஷாயம் தேவை என்றால் எங்கு கிடைக்கும்?

சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள், சித்தமருத்துவ மருந்தகத்தில் கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி நோயாளிக்கு எந்த அளவுக்கு கஷாயம் மட்டும் போதுமா அல்லது கூடுதலாக வேறு மருந்து வேண்டுமா என்று நிர்ணயிப்பார்கள். பக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நவீன சித்த மருத்துவர்களை பார்த்து வாங்கலாம்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆவரை கஷாயத்தை எடுத்துக் கொண்டாலே போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நாள் பட்ட சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இன்சுலின் போடக்கூடிய நிலையில் இருப்பவர்கள் கூட்டு சிகிச்சையாக மருத்துவ ஆலோசனைப்படி தான் மருந்து எடுத்துக்கொள்ள  வேண்டும். நவீன, சித்த மருந்து இரண்டு மருந்துகளையும் மருத்துவர்கள் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம், இதன் மூலம் பின்னாடி வரக்கூடிய நாள் பட்ட சிறுநீரக, நரம்பு செயலிழப்பு நோய்களையும் வராமல் தடுக்கலாம்.

கூட்டு மருத்துவம் என்றால் ஆங்கில மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறார்களா?

அரசாங்க மருத்துவமனைகளிலெயே அது நடக்கிறது. அரசு சுகாதார மையங்களில் பார்த்தால் இரண்டு மருத்துவர்களும் இருக்கிறார்கள். இணைந்து நிறைய இடங்களில் புரிதலுடன் இருக்கிறார்கள். சில இடங்களில் தீவிர நோய் இருக்கும் போது இரண்டு மருந்துகளையும் பரிந்துரைத்து தருகிறார்கள். இனி இது தேவை ஒருங்கிணைந்த மருத்துவத்தை நோக்கித்தான் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. அது காலத்தின் கட்டாயமாகி வருகிறது.

ஒருங்கிணைந்த மருத்துவம் என்றால் அலோபதியும் சேர்த்தா? அவர்கள் இணைய சம்மதிப்பார்களா?

நானே சிலருடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். புரிதல் என்பது அறிவியல் சார்ந்த விளக்கமாக இருக்கும் போது ஏற்றுக்கொள்கிறார்கள். போரூர் மருத்துவமனையில் மதிமேகச்சூரணம் குறித்த பெரிய ஆராய்ச்சி நடந்தது. அதில் பல ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். அது எப்படி ஆரம்பகட்ட சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்கள். வட மாநிலங்களில் இது போன்ற ஆராய்ச்சி ஆயுர்வேத மருத்துவத்துறையுடன் .சேர்ந்து ஆராய்ச்சிகள் பெரிய அளவில் நடக்கிறது. அதில் நாம் பின் தங்கிதான் இருக்கிறோம்.

இதனால் நோயாளிகளுக்கு என்ன பயன்?

இதை நீங்கள் நோயாளிகள் பார்வையிலியிருந்து பார்க்க வேண்டும். எல்லா சர்க்கரை நோயாளிகளும் ஒரு மாற்றத்தை தேடுகிறார்கள். காலம் முழுவதும் மருந்து எடுக்க வேண்டுமே என்று தேடலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் போலியான மருத்துவர்களிடம் சிக்காமல் முறையான இரண்டு துறைகள் படித்த மருத்துவர்களை அணுக வேண்டும். அவர்கள் ஒருங்கிணைந்த முறையான மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகளை எடுக்கும் போது நிவாரணமும் கிடைக்கிறது. செலவும் குறைகிறது.

தமிழகத்தில் சென்னை தவிர  மற்ற மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மருத்துவ மனைகள் எங்கெங்கு  உள்ளன?

ஒருங்கிணைந்த மருத்துவமனைகள் இன்னும் தனியாக ஒன்று உருவாக வில்லை. இப்போதைக்கு புரிதல் உள்ள கூட்டுப் பயிற்சி உள்ளது. அரசாங்க மருத்துவமனையில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரே கேம்பஸில் இரண்டு பேரும் பக்கத்து பக்கத்தில் உள்ளனர். யோகா நேச்சுரபதி மருத்துவர்கள் அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் யோகா நேச்சுர்பதி மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் இணைந்து யோகா, உணவு முறைகள் குறித்து கூட்டு ஆலோசனை சொல்கிறார்கள். மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் புரிதலுடன் நடக்கிறது.

ஒருங்கிணைந்த மருத்துவம் அதிகாரபூர்வமாக சாத்தியமாகுமா? நீண்ட காலம் ஆகுமா?

சொல்ல முடியாது, நீண்ட காலம் இல்லை, நான்கைந்து ஆண்டுகளில் உறுதியாக விரைவில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இது விரைவில் வரும். அதன் பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த மருத்துவம் என்கிற முறை நடைமுறைக்கு வரும். ஏனென்றால் மத்திய அரசு 2017 ஆம் ஆண்டுக்கான மருத்துவ கொள்கை மருத்துவ பன்முகத்தன்மை என்பதைத்தான் முக்கிய அஜண்டாவாக வைத்துள்ளார்கள். அந்த மருத்துவ பன்முகத்தன்மையின் முதல் குறிக்கோளே ஒருங்கிணைந்த மருத்துவம்தான். அனைத்தும் மக்களுக்கு என்கிற அஜண்டாவில் தான் இயங்குகிறார்கள்.

இதன் பயன் என்ன?

ஒருங்கிணைந்த மருத்துவம் காலத்தின் தேவை ஏனென்றால் நாள் பட்ட நோய்களுக்கு இது போன்ற ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது மிகுந்த பயன் தரக்கூடியது. சர்க்கரை நோய் என்பது வெறும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அல்ல. ரத்த நாளங்கள் அழற்சியை குறைப்பது, சிறுநீரகங்களை பாதுகாப்பது, மனதை கட்டுப்படுத்த வேண்டும், ஹார்மோன்களை செம்மைப்படுத்த வேண்டும். இப்படி பல விஷயங்களை பராமரிக்க வேண்டும். அப்படி சிகிச்சை அளிக்கும்போது அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி வரும் போது சித்தா, ஆயுர்வேதம், அலோபதி என அனைவரும் ஒருங்கிணைவது காலத்தின் தேவை.

இன்சுலின் போடும் நிலைக்கு சென்ற ஒருவர் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற வாய்ப்புள்ளதா?

கிடையாது. இன்சுலின் என்பது கணையம் இன்சுலின் முழுமையாக சுரக்கும் தன்மை இல்லாமல் போவதைக் குறிப்பது. அப்படி இருக்கும்போது இன்சுலின் போடுவதை நிறுத்துவது ஆபத்து. ஆங்கில மருத்துவர்கள் படிப்படியாக சர்க்கரை கட்டுப்பாடு வரும்போது, அளவைக் குறைத்து மருந்து கொடுத்து வருவார்கள். இன்சுலினை குறைப்பார்கள். சித்த மருத்துவத்தில் அப்படிப்பட்டவர்கள் வரும் போது சித்த மருந்துகளை கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வருவோம். நல்ல கட்டுப்பாடு இருக்கும் போது குறைக்க முடியும். எனக்கு எந்த மருந்தும் வேண்டாம் சித்த மருத்துவம் போதும் என்று வருவது ஆபத்து.

ஆரம்ப நிலையில் உள்ளவர் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்வது சாத்தியமா?

அவர் சித்த மருத்துவத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். புதிதாக ஒரு நபருக்கு சாப்பாட்டுக்கு முன் 170 இருக்கு சாப்பாட்டுக்குப் பின் 240 இருக்கு என்று வருவார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி கொடுத்து, மூலிகை கஷாயம் அளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம். நாள் பட்ட சர்க்கரை நோய் பத்தாண்டுகளாக இருக்கிறது அப்படிப்பட்டவர் வந்தால் நவீன மருத்துவத்தை படிப்படியாக குறைத்து சித்த மருத்துவத்தை படிப்படியாக ஏற்றுவது தான் சரியாக இருக்கும்.

தற்போது ஏன் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது?

உடலுழைப்பு மிகவும் குறைந்து விட்டது. மாணவப் பருவத்தில் உள்ள குழந்தைத்தனமே இல்லை. அவர்கள் எந்திரமயமாக்கப்படுகிறார்கள். நம்முடைய எதிர்பார்ப்புகளை திணித்து அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறோம். அதன் பின்னர் படித்து முடித்து வேலை திருமணம் என்று அவர்கள் வளரும் போது 30 வயதில் அடுத்தடுத்த வாழ்க்கை பயத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது.

இவ்வாறு மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்தார்.