முடவன் ஆட்டுக்கால் என்னும் முடவாட்டுகால் கிழங்கு | மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’

‘ஆட்டுக்கால் சைவமா? என்று ஏற்காடு மலைவாசிகளிடம் கேட்டால், ‘ஆமாம்’ என்று நிச்சயமாகப் பதில் அளிக்கின்றனர். சேர்வராயன் மலையில் ‘ஆட்டுக்கால்’ என்றும், கொல்லி மலையில் ‘முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ என்றும் ஒரு தாவரத்தின் கிழங்கு அழைக்கப்படுகிறது. Polypodiaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் Drynaria quercifolia. இது மலைப்பகுதிகளில் வளரும் ஒருவகை தகரை, பெரணித் தாவரம்.

பார்ப்பதற்கு, கம்பளி போர்த்தியதுபோலக் காணப்படும் கிழங்குகள், கிலோவுக்கு முன்னூறு முதல் முன்னூற்றைம்பது ரூபாய்வரை விற்கப்படுகின்றன. சாக்குத் துணியில் சிறிது மணலை இட்டு வைத்துக் கிழங்கை மூடிவைத்தால் ஆறு மாதம்வரை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது சிறப்பு.

எளிய உபாதைகளுக்கு மருந்து

கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால் சூப் மிகவும் பிரசித்தம். இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். எலும்பு அடர்த்திக் குறைவு (Osteopenia) நோயைத் தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீக்கமுறுக்கி, கிருமிநாசினி, உரமாக்கி போன்ற செய்கைகள் இதற்கு உண்டு. நீரிழிவு நோயில் இதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

“சின்ன வயசுல இருந்தே இந்தக் கிழங்க அடிக்கடி சாப்பிட்டு வர்றோம், எனக்கு எழுபது வயசு ஆகுது காய்ச்சலு, வலினு ஆஸ்பத்திரிக்கே நான் போனதில்ல” எனச் சிலாகிக்கிறார் சேர்வராயன் மலை முதியவர் ஒருவர். உடல் வலி, மூட்டு வலிக்கு அப்பகுதி மக்கள் உடனடியாகப் பயன்படுத்தும் மருந்து இந்தச் சைவ ஆட்டுக்கால்தான்.

உணவாக

கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து, வாயில் அடக்கிக்கொண்டால் நீண்ட நேரம் தாகத்தைத் தணிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு. தோல் பகுதியை நீக்கிவிட்டு, கிழங்கைப் பயன்படுத்துவதே கிழங்குக்கான சுத்தி முறை.

முடவன் ஆட்டுக்காலின் தோலை நீக்கிவிட்டு, கிழங்கைப் பசைபோல அரைத்துக்கொண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து, சீரகம், சிறு வெங்காயம், மிளகு, பூண்டு அரைத்துக் கலந்து சூப் செய்து குடிக்கலாம். சைவ ஆட்டுக்கால் சூப் நோய்களை நீக்குவது மட்டுமன்றி, மிகவும் சுவையானதும்கூட.

சூப் மட்டுமின்றி சட்னி, துவையல் என உணவாக முடவன் ஆட்டுக்கால் கிழங்கைப் பயன்படுத்தி வந்தால் நவநாகரிக நோய்கள் நெருங்காது என உறுதியளிக்கின்றனர் மலைவாசிகள். அடுத்த முறை மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லும்போது, முடவன் ஆட்டுக்கால் சூப்பைக் குடிக்க மறக்காதீர்கள்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com