பரம்பரை மருத்துவப் பெருமை சொல்லும் கோவை தெலுங்குப்பாளையம் மருத்துவமனை.

பழுப்பு மஞ்சள் வண்ணக் கட்டி டம். நீல நிறப் பெயர் பலகையில் காணப்படும் வெள்ளை எழுத்துகள் ஆஸ்பத்திரியின் பழமையைப் பறைசாற்றுகின்றன. வராந்தாவுக்குள் நுழையும்போதே மூலிகை எண்ணெய் வாசம் காற்றில் மிதந்து வருகிறது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காமராஜர், ஆர்.வெங்கட்ராமன், கிருபானந்த வாரியார், மற்றும் பல வெளிநாட்டவர்கள் காணப்படுகின்றனர்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விஜய் மர்ச்சென்ட்டின் முதுகு எலும்பு முறிவுக்கும், ஆச்சார்ய கிருபளானியின் முழங்கால் எலும்பு முறிவுக்கும் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் அணி வகுக்கின்றன. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, எகிப்து, ஆப்ரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களின் படங்கள் பழமை மாறாமல் காட்சியளிக்கின்றன.

‘அந்தக் காலத்தில் ராணுவத்தில் அடிபடும் வீரர்களை இங்கே கொண்டு வந்து சிகிச்சைக்குச் சேர்ப்பார்கள். அப்படிப் பல அதிகாரிகள் சிகிச்சை பெற்றுக் குணமாகிச் சென்றிருக்கிறார்கள்!’ என்று பழுப்பேறிய ஆவணங்களைக் காட்டுகின்றனர் மருத்துவமனை பொறுப்பாளர்கள். இப்படிப் புகழ்பெற்ற மருத்துவமனை அது.

பழமை மாறாமல்

‘தெலுங்குப்பாளையம் வைத்தியசாலையில் சரியாகாத எலும்பு முறிவு, எங்குப் போனாலும் சரியாகாது!’ என்பார்கள். அவ்வளவு பிரசித்தமானது தெலுங்குப்பாளையம் எலும்பு முறிவு ஆஸ்பத்திரி. 50 – 60 ஆண்டுகளுக்கு முன்புவரை பிரபலங்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் சிகிச்சை எடுத்துக்கொண்ட எலும்பு முறிவு மருத்துவமனை அது.

கோவை ரயில்நிலையத்திலிருந்து பேரூர் செல்லும் சாலையில் நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகளிடம் மக்கள் காட்டி வந்த ஆர்வம் மறைந்து, பெருமளவு மக்கள் அலோபதி மருத்துவத்துக்கு மாறிவிட்டனர். ஆனால், இந்த மருத்துவமனையில் தயாரிக்கப்படும் மூலிகை எண்ணெய் இப்போதும் வெளிநாடு செல்கிறது.

பரம்பரை மருத்துவம்

‘மற்ற மருத்துவமனைகள், மருத்துவர்களால் கைவிடப்பட்ட, எலும்பு முறிவு நோயாளிகள், இளம்பிள்ளை வாதம், வாதம், பக்க வாதம் போன்ற நோயாளிகளுக்கும், நரம்பு பிடிப்பு, ரத்தக்கட்டு, பிறவி ஊனம், கூன், ஜன்னி உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க, 1949-ம் ஆண்டு குஜராத் பாவ்நகர் மகாராணியால் தொடங்கப்பட்டதுதான் இந்த மருத்துவமனை. கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் தன்வந்திரி மருத்துவமனையைப் போல, தமிழ்நாட்டில் பரம்பரை வைத்தியசாலையாக உருவானதுதான் தெலுங்குப்பாளையம் ஆஸ்பத்திரி.

கேரளத்தில் புகழ்பெற்று விளங்கும் ஆர்ய வைத்தியசாலையை ஒரு குடும்பம் பாரம்பரியமாக நடத்திவருவதைப்போல், எங்கள் மாமனார் வி.அர்ச்சுனன் இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவர் காலத்துக்குப் பிறகு என் கணவர் முத்துக்குமார் இதை நிர்வகித்துவந்தார். இப்போது நானும் என் மகனும் கவனித்து வருகிறோம். என் மகன் வெளிநாட்டில் அலோபதி, சித்தா என இரண்டு மருத்துவத்திலும் சிறந்து விளங்குகிறார்!’ என்று இந்த ஆஸ்பத்திரியின் பூர்வாசிரமக் கதையை விவரிக்கிறார் சுகுணா.

காமராஜருக்குத் தைலம்

‘30 – 40 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தா இங்கே வந்து தங்கி எலும்பு முறிவு, வாதம், போலியோ நோய்களுக்கு சிகிச்சை எடுக்கும் நோயாளிகள் கணக்கில் அடங்காது. படுக்கை, தங்கும் வசதி கேட்டு வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களி லிருந்தும் நிறைய பேர் காத்திருப்பார்கள். முன்பு நிறைய பேருக்கு இருந்த போலியோ, இப்போது தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டுவிட்டது. காமராஜருக்கும் கிருபானந்த வாரியாருக்கும் இங்கிருந்துதான் கை, கால் வலிக்கு எண்ணெய் போகும்.

என்றாலும் எலும்பு முறிவுக்கு அறுவைசிகிச்சை செய்து நரம்பு வேலை செய்யாத நிலையில் பல பேர் இங்கே வருகிறார்கள். முக்கியமாக முதுகெலும்பு உடைந்து அறுவை சிகிச்சை செய்து குணமாகாதவர்கள்கூட இங்கே வந்து மூலிகை எண்ணெய் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

எலும்பு முறிவு, வாதநோய்கள், எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றிற்கு ஏற்ப நம்பர் 1, நம்பர் 2… என நம்பர் 12 வரையில் தர வாரியாக மூலிகை எண்ணெய் பாரம்பரிய முறைப்படி இங்கே தயாரிக்கப்படுகிறது.


சுகுணா

வெளிநாட்டு நோயாளிகள்

ரஷ்யாவிலிருந்து ஆறு வருடங்களுக்கு முன்பு இங்கே பலரும் வந்து தங்கிச் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். அப்படிச் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் ஆண்ட்ரூ. நடக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வரப்பட்ட அவர், ஒன்பது மாதங்கள் தங்கிச் சிகிச்சை பெற்றுச் சென்றார். அவர் மகன் இகோ நட்டாரியா சமீபத்தில் வந்திருந்தார். தன் தந்தையைக் குணப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தனக்கும் எண்ணெய் வாங்கிச்சென்றார். அவரைப்போலவே களிம்பு, எண்ணெய் வாங்க பிரான்ஸ், சிகாகோ, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்தெல்லாம் வருகிறார்கள்.

அந்தக் காலத்தில் உள்ளதுபோல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இப்போதும் மூலிகை எண்ணெயைத் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறோம். உள்ளூர் மக்களும் நம் மண்ணின் மருத்துவத்தை நாடிச்செல்லும் போக்கு தற்போது அதிகரித்துவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கூட்டம் கூடுதலாக வருகிறது!’ என்கிறார் சுகுணா.