ஆஸ்துமாவும் திப்பிலி ரசாயனமும்

இந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?

பல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து.

வீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், புகை, மது, பொடி, சுயிங்கம் போன்றவற்றின் ஒவ்வாமையாலும், புகையிலை போடும் பழக்கத்தாலும், வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே, பாடி லோஷன், ஹேர் லோஷன், ஹேர் டை, முகப்பூச்சு கிரீம், சன் ஸ்கிரீன் லோஷன், நகப்பூச்சு, கண்மை போன்றவற்றின் ஒவ்வாமையாலும், மனதுக்கு ஒவ்வாத வாசனையாலும், பருவகால மாற்றங்களாலும், அடைமழை, கடும் பனி, குளிர் ஒவ்வாமையாலும், கடின உழைப்பு, கடின உடற்பயிற்சிகளாலும், தரமற்ற உணவு, தின்பண்டங்களை அதிகம் உண்பதாலும், குளிர்ந்த காற்றைச் சுவாசிப்பதாலும், குளிர்ந்த நீரைத் தொடர்ந்து குடிப்பதாலும், அடைத்து விற்கப்படும் உணவு, தின்பண்டங்களின் ஒவ்வாமையாலும், குளிர்பானங்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், கிரீம் பிஸ்கட் ஆகியவற்றின் ஒவ்வாமையாலும், சுகாதாரமற்ற காற்றைச் சுவாசிப்பதாலும், பரம்பரையாகவும்கூட இந்த நோய் வரக்கூடும்.

பல்வேறு நோய்களின் தொடர்ச்சியாகவும், நாள்பட்ட நோய் நிலைகளிலும், மன அழுத்தம், மன உளைச்சல், தீராக் கவலை, அதிர்ச்சி போன்ற பிரச்சினைகளாலும் இந்நோய் ஏற்படும். இதுதவிர உடல் பலவீனம், தூக்கமின்மை, நாள்பட்ட மலக்கட்டு போன்றவையும் ஆஸ்துமா நோய் ஏற்பட வழி வகுக்கும்.

அறிகுறிகள்

உடலுக்கு ஒவ்வாத உணவுப் பொருட் களை உண்டவுடனும், மனதுக்கு ஒவ்வாத வாசனையை நுகர்ந்தவுடனும், மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும்போது, தும்மல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல், மார்பின் இரு பக்கமும் வலி, மார்பை இறுக்கிக் கட்டியது போன்ற உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம். விலா பக்கங்களில் வலி, பேச இயலாமை, உட்கார இயலாமை, இரவில் தூங்க முடியாமை, வயிற்று உப்புசம், தீவிர நிலையில் வியர்வை, மார்பில் கட்டிய கோழையை வெளியேற்ற இயலாமை, கர்… கர்… என்ற சத்தம், பூனையின் சுவாசம் போன்ற சத்தம், சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோயை உறுதிப்படுத்துவது

ஒவ்வாமையால் ஏற்பட்ட இரைப்பு இருமலா, இதய நோய் பாதிப்பால் வரும் மூச்சு திணறலா, ரத்தச் சோகையால் வரும் இரைப்பு நோயா, சிறுநீரக நோயில் வரும் மூச்சு திணறலா, தீவிர நோய் நிலையில் வரும் மூச்சு திணறலா என நோயை முதலில் உறுதி செய்துவிட்டு, சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எந்த வயதில் ஏற்பட்ட ஆஸ்துமாவாக இருந்தாலும், தொடர் சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.

சிகிச்சை

சமையல் அறையில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி முதல் பல்வேறு மூலிகைகளின் கூட்டு மருந்துகள் மூலமும், உடலுக்கு ஒவ்வாத உணவு, நிகழ்வுகளைத் தவிர்ப்பதன் மூலமும் எளிதில் இந்நோயைத் தீர்க்க முடியும்.

திப்பிலி ரசாயனம்

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், சித்தரத்தை, பேரரத்தை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், லவங்கம், லவங்கபத்திரி, தாளிசபத்திரி, கொடிவேலி வேர் பட்டை, ஏலக்காய், லவங்கப்பட்டை போன்ற மூலிகை மருந்துகள் சேர்ந்த திப்பிலி ரசாயனம் நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் படைத்தது.

இந்த மருந்தை மருத்துவர் ஆலோசனை பெற்றுப் பத்தியங்களைக் கடைப்பிடித்து உட்கொண்டால், ஆஸ்துமா நோயைத் தீர்க்க முடியும். திரும்பத் திரும்ப வராமல் தடுக்க முடியும். உணவை மருந்தாக்குவோம். உடலை இரும்பாக்குவோம்.

கட்டுரையாளர், திருச்சி இ.எஸ்.ஐ. சிறப்பு நிலை சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drkaamaraj@gmail.com